சென்னையில் ஏ.டி.எம். எந்திரத்தில் மைக்ரோ கேமரா- ‘ஸ்கிம்மர்’ கருவி பொருத்திய கும்பல்; கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு

சென்னை அயனாவரத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் மைக்ரோ கேமரா மற்றும் ‘ஸ்கிம்மர்’ கருவியை பொருத்திய மர்ம கும்பல் உருவம் பதிவாகி உள்ளதா? என கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

Update: 2019-07-17 22:45 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை அயனாவரம் கான்ஸ்டபிள் சாலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி இல்லை என தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு அயனாவரம் பங்காரு தெருவை சேர்ந்த கோபிகிருஷ்ணன் (வயது 45) என்பவர் இந்த ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார்.

அப்போது அவருடைய ஏ.டி.எம். கார்டு எந்திரத்தில் சிக்கிக்கொண்டது. அதை எடுக்க முயன்றபோது, ஏ.டி.எம். கார்டு குறித்த ரகசியங்களை திருட பயன்படுத்தப்படும் ‘ஸ்கிம்மர்’ கருவி யும் கையோடு சேர்ந்து வந்தது.

கோபிகிருஷ்ணன் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் அவருக்கு ‘ஸ்கிம்மர்’ கருவி குறித்த சந்தேகம் ஏற்பட்டது. ஏ.டி.எம். எந்திரத்தை கூர்ந்து பார்த்தபோது ரகசிய எண்களை பதிவு செய்யும் பகுதியில் மைக்ரோ கேமரா பொருத்தப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர், அயனாவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஏ.டி.எம். எந்திரத்தை சோதனை செய்தனர். அதில் மர்மநபர்கள், ஏ.டி.எம். எந்திரத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவி மற்றும் மைக்ரோ கேமரா பொருத்தி இருப்பது உறுதியானது.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கூடுதல் கமிஷனர் தினகரன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் சரவணக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். வங்கி அதிகாரிகள் மற்றும் பணம் நிரப்பும் தனியார் நிறுவன அதிகாரிகளும் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தில் பொருத்தப்பட்ட மைக்ரோ கேமரா, ‘ஸ்கிம்மர்’ கருவியையும் ஆய்வுக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றனர்.

இதன் மூலம் மர்மநபர்கள் யாருடைய வங்கி கணக்கில் இருந்தும் பணம் சுருட்டி உள்ளனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்