பெரம்பலூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி 200-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Update: 2019-07-18 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் 2-வது ஆண்டு மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நேற்று எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் அரவிந்தன் தலைமை தாங்கினார். பொருளாளர் ரவி வரவேற்றார். டேக்வாண்டோ போட்டியினை டாக்டர் கிருபாகரன் தொடங்கி வைத்தார். டேக்வாண்டோ போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. இதில் 11 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சப்-ஜூனியர் பிரிவிலும், 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கேடட் பிரிவிலும், 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஜூனியர் பிரிவிலும், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சீனியர் பிரிவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு 8 பிரிவுகளில் டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 200-க்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

மாநில அளவில்

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பெரம்பலூர் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன், பெரம்பலூர் மாவட்ட டேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான முதல், இரண்டு இடங்களை பிடித்த வீரர்- வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர். மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியின் ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளுக்கு முதன்முறையாக பெரம்பலூரில் வருகிற ஆகஸ்டு மாதம் 9, 10, 11-ந் தேதிகளில் நடைபெறவுள்ளன. சப்-ஜூனியர், கேடட் ஆகிய பிரிவுகளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 26, 27, 28-ந் தேதிகளில் தர்மபுரியில் நடக்கிறது. மாநில அளவில் முதல் இடம் பிடிப்பவர்கள் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதி தேர்வில் கலந்து கொள்வார்கள்.

மேலும் செய்திகள்