மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் மறியல்

தஞ்சையில் மாணவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-18 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருபவர் நித்தீஷ் (வயது 20). சம்பவத்தன்று இவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கரந்தை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை கரந்தையை சேர்ந்த 3 பேர் சோடா பாட்டிலால் தாக்கினர்.

இதில் காயம் அடைந்த நித்தீஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா என்பவரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

திடீர் மறியல்

இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் திடீரென கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினர். மாணவரை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர்.

அப்போது அவர்கள் மாணவரை தாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேரையும் விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்