அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் ஓட்டெடுப்பை உடனே நடத்த கவர்னர் பரிந்துரை கர்நாடக சட்டசபையில் கடும் அமளி சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

கர்நாடக சட்டசபையில் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்-மந்திரி குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.

Update: 2019-07-18 23:44 GMT
பெங்களூரு,

இதற்கிடையே ஓட்டெடுப்பை உடனே நடத்த கவர்னர் பரிந்துரைத்ததால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்தி வைத்தார். சபை இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கூடுகிறது.

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது.

கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் 3-வது நாள் கூட்டம் நேற்று காலை 11.15 மணிக்கு பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், முதல்-மந்திரி குமாரசாமி எழுந்து, தனது தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அதை சபாநாயகர் உறுதி செய்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா எழுந்து “முதல்-மந்திரி கொண்டு வந்துள்ள நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்றே வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும்.” என்றார்.

அதற்கு சபாநாயகர் ரமேஷ்குமார், “இருதரப்பினரும் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டால், 5 நிமிடங்களில் வாக்கெடுப்பு நடத்த நான் தயாராக இருக்கிறேன். எனக்கும் தனிப்பட்ட முறையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை“ என்றார்.
அதன் பிறகு குமாரசாமி பேசியதாவது:-

“எடியூரப்பா மிகவும் அவசரமாக இருப்பதாக தெரிகிறது. ஒரே நாளில் வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். கர்நாடகத்தில் ஜனநாயகத்திற்கு எதிராக என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலை எதற்காக வந்தது, காரணம் என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மதிப்புமிக்க சபாநாயகர் பதவிக்கு அவமரியாதை ஏற்படும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். உங்கள்(சபாநாயகர்) மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். சில எம்.எல்.ஏ.க்கள் உங்களிடம் வந்து தாமாக முன்வந்து ராஜினாமா செய்ததாக கூறியுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள், அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்கள். அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில மக்களுக்கு நான் பதிலளிக்க வேண்டும். இவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லாமல் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியுமா? நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் விஷயத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். விவாதம் நடத்த காலக்கெடு எதுவும் விதிக்க வேண்டாம். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அப்போது சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா குறுக்கிட்டு, 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் விவரம் கேட்க வேண்டி இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றார்.

அப்போது உணவு இடைவேளைக்காக சபை ஒத்தி வைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது, பா.ஜனதா உறுப்பினர்கள் எழுந்து, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி பேசினர். இதற்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். சபாநாயகர் குறித்து பா.ஜனதா உறுப்பினர்கள் கூறிய கருத்தை கண்டித்து கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா நடத்தினர். இதையடுத்து சபையை சபாநாயகர் ரமேஷ்குமார் அரை மணி நேரம் ஒத்திவைத்தார்.

இதன் பிறகு சபை தொடங்கியபோது, சபாநாயகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசுகையில், “கவர்னர் ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகளை இன்று (நேற்று) ஒரே நாளில் அதாவது இரவு 12 மணிக்குள் நிறைவு செய்யுங்கள். இது உத்தரவு கிடையாது, தகவல் என்று தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

கவர்னரின் இந்த உத்தரவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் ஆட்சேபனையை தெரிவித்தது. “சட்டசபை நடவடிக்கையில் தலையிட கவர்னருக்கு அதிகாரம் இல்லை. அதனால் கவர்னர் இந்த சபை நடவடிக்கையில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்“ என்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. எச்.கே.பட்டீல் குறிப்பிட்டார்.

சபாநாயகர் ரமேஷ்குமார் பேசுகையில், “நான் யாருடைய அழுத்தத்திற்கும் பணிய மாட்டேன். சட்டப்படி எனது பணிகளை செய்கிறேன். சித்தராமையா எழுப்பிய பிரச்சினை குறித்து சட்ட ஆலோசனை கேட்டுள்ளேன். இங்கு நடைபெறும் நிகழ்வுகள் குறித்து கவர்னருக்கு தெரிவித்துள்ளேன்“ என்றார்.

அப்போது பா.ஜனதா உறுப்பினர் மாதுசாமி, சபாநாயகர் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஸ்ரீமந்த் பட்டீல் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் இரவு ரெசார்ட் ஓட்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் மும்பைக்கு சென்றது குறித்து கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் பிரச்சினை கிளப்பினர். அவர்கள் ஸ்ரீமந்த்பட்டீல் மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற படத்தை கைகளில் உயர்த்தி காட்டி, பா.ஜனதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் கடும் அமளி உண்டானது. சபாநாயகர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் கிருஷ்ணாரெட்டி, அவர்களை நோக்கி, இருக்கையில் அமரும்படி வேண்டுகோள் விடுத்தார். அதை அந்த உறுப்பினர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மாலை 6 மணி அளவில் சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். இதனால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடுகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டசபை கூட்ட அரங்கத்திற்குள்ளேயே இன்று (அதாவது நேற்று) இரவு முழுவதும் இருப்பார்கள் என்று எடியூரப்பா அறிவித்தார். அதன்படி அந்த உறுப்பினர்கள் அந்த கூட்ட அரங்கத்திலேயே படுத்து தூங்கினர்.

மேலும் செய்திகள்