55 வீடுகளில் திருடிய ஆக்கி வீரர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னையில் 55 வீடுகளில் திருடிய பட்டதாரி ஆக்கி வீரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். திருட்டு தொழிலுக்கு வந்தது ஏன்? என்பது குறித்து அவர், போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2019-07-19 22:45 GMT
சென்னை,

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆக்கி வீரரின் பெயர் ஆரிப்பிளிப்ஸ் மைக்கேல் (வயது 53) என்பதாகும். இவர், சென்னையில் திருட்டு தொழிலில் கொடிக்கட்டி பறந்தவர். சென்னை முழுவதும் 55 வீடுகளில் திருடி லட்சம் லட்சமாக சம்பாதித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் மோகன் என்பவரது புத்தகக்கடையில் கடந்த 3-ந்தேதி அன்று ரூ.1.80 லட்சமும், தங்க நகைகளும் திருடு போய்விட்டது. இந்த வழக்கில் குற்றவாளியை பிடிக்க இணை கமிஷனர் சுதாகர், துணை கமிஷனர் ஜெயலட்சுமி, உதவி கமிஷனர் ரமேஷ் ஆகியோரின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா காட்சியும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பிரபல கொள்ளையனும், ஆக்கி வீரருமான ஆரிப்பிளிப்ஸ் மைக்கேல் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணமும், தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

திருட்டு தொழிலுக்கு வந்தது ஏன்? என்பது குறித்து, ஆரிப்பிளிப்ஸ் மைக்கேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

எனது சொந்த ஊர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆகும். நான் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பட்டபடிப்பு படித்தேன். நான் பள்ளியில் படித்தபோது, பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான போட்டியில் ஆக்கி விளையாடி உள்ளேன். கல்லூரியில் உள்ள ஆக்கி அணியிலும் நான் விளையாடி உள்ளேன்.ஆக்கி விளையாட்டில் பெரிய அளவில் புகழ்பெற வேண்டும் என்பது எனது கனவாகும். ஆனால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த உடன் எனது வாழ்க்கையே தடம் புரண்டுவிட்டது.

வேலை கிடைக்காமல் அவதிப்பட்டேன். இந்தநிலையில் நான் 2 பெண்களை திருமணம் செய்தேன். 2 மனைவிகளோடும் குடும்பம் நடத்துவதற்கு வருமானம் இல்லை. இதனால் திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். லட்சம் லட்சமாக பணம் கிடைத்தது. இதனால் வாழ்க்கையும் சந்தோஷமானது.

ஒரு மனைவியை திருப்பத்தூரில் குடி வைத்தேன். இன்னொரு மனைவியோடு சென்னையில் குடித்தனம் நடத்தினேன். எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும், அதை எளிதில் உடைத்து விடுவேன். திருடுவதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றேன்.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் கைதான ஆரிப்பிளிப்ஸ் மைக்கேல், நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்