ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு திடீர் உடல்நலம் பாதிப்பு: தமிழகம் முழுவதும் வழங்கப்பட்ட ஊசி மருந்தை திருப்பி அனுப்ப உத்தரவு

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசியால் குளிர்காய்ச்சல் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்ட ஊசி மருந்தை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2019-07-19 23:15 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் மாலை ஆண்கள் சிகிச்சை பிரிவில் ஊசிபோட்டுக்கொண்டவர்களுக்கு திடீரென்று குளிர் காய்ச்சல், உடல்நடுக்கம் போன்றவை ஏற்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நோயாளிகளுக்கு காலாவதியான மருந்து செலுத்தப்பட்டதாகவும், மருந்தினை மாற்றி பயிற்சி செவிலியர்கள் ஏற்றி விட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் விசாரணை செய்ததோடு ஆறுதலும் கூறினார்.

இதைத்தொடர்ந்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சகாய ஸ்டீபன் ராஜ், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால், முதன்மை டாக்டர்கள் மலையரசு, கருப்புசாமி ஆகியோரிடம் விசாரித்தார்.

இதன்பின்னர் அவர் கூறியதாவது:– உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன்கொண்ட மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது. இதுவழக்கமாக அனைவருக்கும் போடும் ஊசியாகும். இந்த ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் 52 பேரில் 30 பேருக்கு எதிர்வினை ஏற்பட்டு திடீரென்று குளிர்காய்ச்சல், உடல்நடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக மாற்று மருந்து வழங்கி துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பயனாக அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இதனால் வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்று ரத்த பரிசோதனை செய்து பாதிப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட எதிர்ப்பு சக்தி கொண்ட ஊசிமருந்து தற்போதுதான் 20 ஆயிரம் வந்துள்ளன. அவற்றில் முதல்கட்டமாக 4 வார்டுகளுக்கு தலா 100 எண்ணங்கள் வீதம் 400 ஊசிமருந்துகள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. இதில் 52 ஊசிமருந்துகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டு உடனடியாக அந்த மருந்துகளை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு மருந்தின் காரணமாக ஏற்பட்டதா அல்லது நிர்வாக குறைபாடு காரணத்தினாலா என்று கண்டறிந்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜவகர்லால் கூறியதாவது:–

தமிழ்நாடு மருந்து கிடங்கு நிறுவனத்தில் இருந்து புதிதாக வந்த இந்த எதிர்ப்பு திறன்கொண்ட மருந்து 4 வார்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1990–ம் ஆண்டு முதல் இந்த நோய் எதிர்ப்பு மருந்து புழக்கத்தில் உள்ளது. உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிப்பதற்காக மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி திறன்கொண்டது. ஆண்கள் சிகிச்சை வார்டில் சிலருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மருந்தினை அருகில் உள்ள பெண்கள் வார்டு, அறுவை சிகிச்சை பிரிவு வார்டு ஆகியவற்றில் நோயாளிகளுக்கு போடப்பட்டுள்ளது. அங்குள்ளவர்களுக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்படவில்லை. எனவே, இந்த மருந்தினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கருதமுடியாது.

அதேநேரத்தில் மருந்து ஏற்றுவதற்கு பயன்படுத்திய ஊசி, தண்ணீர் உள்ளிட்டவைகளும் காரணமாக இருக்கலாம். எனவே அனைத்தும் உடனடியாக சேகரிக்கப்பட்டு ஆய்வு கூட பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஓரிருநாளில் அதன் அறிக்கை கிடைக்கப்பட்டுவிடும். அதன்பின்னரே என்ன காரணம் என்று தெரியவரும். இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வினியோகம் செய்யப்பட்ட ஏபி 039005 என்ற பதிவு எண்ணுடன், 226 என்ற குறியீடு எண் கொண்ட கடந்த ஏப்ரல் மாதம் உற்பத்தி செய்து 2021–ம் ஆண்டு மார்ச் மாதம் வரை பயன்படுத்த தகுதிகொண்டதாக கூறப்படும் மேற்கண்ட ஊசிமருந்து முழுவதையும் பயன்படுத்தாமல் உடனடியாக திருப்பி அனுப்புமாறு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மூலம் இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் உள்ள மருந்து கிடங்கு பொறுப்பாளர் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்கு இதற்கான அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இந்த பதிவு எண் கொண்ட செபோடாக்சிம் மருந்தினை யாருக்கும் பயன்படுத்தாமல் வருகிற 25–ந் தேதிக்குள் திருப்பி அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி இந்த மருந்துகள் அனைத்தையும் மருந்து கிடங்கிற்கு திருப்பி அனுப்பும் பணியில் மருத்துவ துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்