கண்ணமங்கலம் அருகே சுரங்க நடைபாதையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதி

கண்ணமங்கலம் அருகே சுரங்க நடைபாதையில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-20 22:30 GMT
கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கண்ணமங்கலத்தில் இருந்து செல்லும் சாலையில் விழுப்புரம்-காட்பாடி ரெயில்வே பாதை செல்கிறது. பல ஆண்டுகளாக ஆளில்லா லெவல் கிராசிங்காக இருந்தது. பிராட்கேஜ் மின்சார ரெயில் பாதை அமைத்தபின் லெவல் கிராசிங் இயக்கப்பட்டது.

இந்த நிலையில் இங்கே சுரங்க நடைபாதை அமைக்க ரெயில்வே துறை முயற்சி மேற்கொண்டது. இதற்கு அம்மாபாளையம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ரெயில்வே துறை இந்த லெவல் கிராசிங்கில் கடந்த ஆண்டு சுரங்க நடைபாதை அமைக்கும் பணியை மேற்கொண்டது. தற்போது இந்த பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

தற்போது அமைக்கப்பட்டு வரும் சுரங்க நடைபாதையில் மழையின் போது தண்ணீர் வெளியே செல்ல வழிவகை செய்யவில்லை. தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் சுரங்க நடைபாதையில் 10 அடிக்கும் மேலாக மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த ஊருக்கு வேலூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் வெளியூர் செல்ல வாகன வசதி இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. வாகனம் வைத்திருப்பவர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு வேலூர், ஆரணி மற்றும் கண்ணமங்கலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சுரங்க நடைபாதையில் மழைநீர் புகாதவாறு இருபுறமும் மேற்கூரை அமைக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்