திருவக்கரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருவக்கரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-20 22:15 GMT
விழுப்புரம், 

வானூர் தாலுகா திருவக்கரை திரவுபதியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் மின் மோட்டார் பழுது காரணமாக கடந்த சில நாட்களாக அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட பொதுமக்கள், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். இருப்பினும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 6.50 மணியளவில் திருவக்கரை மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரும்பாக்கம்- திருவக்கரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 7.10 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்