மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் அதிரடி

மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பதுக்கி வைத்திருந்த 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-07-20 23:00 GMT
மடத்துக்குளம்,

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், எளிதில் மக்கும் தன்மையற்ற 14 விதமான ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் பறிமுதல், அபராதம் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்த ஒன்றிய ஆணையாளர் பியூலா ஹெப்சிபாய், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹெல்டன் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் தலைமையிலான குழுவினர் திட்டமிட்டனர்.

அதன்படி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதிகா, மதனன் மேரி, பாண்டிமாதேவி ஆகியோர் அடங்கிய குழுவினர் சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து நேற்று மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுருநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) கிருஷ்ணமூர்த்தி, மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், சதீஷ்குமார், சாந்தி, எத்திராஜ், மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தங்கவேலு முகமது இசாக் ஆகியோர் வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ஜோத்தம்பட்டி, சோழமாதேவி, கொழுமம், பாப்பான்குளம், கடத்தூர், காரத்தொழுவு, ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. வணிக நிறுவனங்கள் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றினார்கள்.

மடத்துக்குளம் ஒன்றிய பகுதியில் நேற்று நடந்த அதிரடி சோதனையின் போது இப்பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்