கடல் கொந்தளிப்பில் சிக்கிய தூத்துக்குடி மீனவர்கள் மண்டபத்துக்கு வந்து கரையேறினர்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்க வந்து கடல் கொந்தளிப்பில் தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மண்டபம் பகுதியில் கரை சேர்ந்தனர்.

Update: 2019-07-20 23:15 GMT

பனைக்குளம்,

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் இருந்து கடந்த 16–ந்தேதி சேசுராஜா என்பவருக்கு சொந்தமான ஒரு பைபர் படகில் சேசுராஜா, தாமஸ், தனபால், ராஜி, அருள், செல்வம் ஆகிய 6 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க புறப்பட்டனர். இந்த மீனவர்கள் ஒரு வாரம் வரையிலும் படகிலேயே தங்கியிருந்து மீன் பிடித்து திரும்புவது வழக்கமாகும்.

இந்தநிலையில் பாம்பனுக்கும், மண்டபத்திற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் நேற்று மீன் பிடித்து கொண்டிருந்த போது பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் அலையில் சிக்கி மீனவர்கள் படகில் தத்தளித்தனர்.

இதைத்தொடர்ந்து 6 பேரும் படகுடன் தங்கள் சொந்த ஊரான தூத்துக்குடி செல்ல முயன்றனர். ஆனால் கடல் அலையின் வேகம், சூறாவளி காற்றால் செல்ல முடியவில்லை.

தத்தளித்த 6 மீனவர்களும் நேற்று படகுடன் பாதுகாப்பாக மண்டபம் பகுதிக்கு கரை வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களது படகை தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி ஓய்வெடுத்து வருகின்றனர்.

கடல் கொந்தளிப்பில் சிக்கி உயிர் தப்பியது குறித்து மீனவர்கள் செல்வம், அருள் ஆகியோர் கூறியதாவது:–

நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகமாக இருந்ததுடன் கடல் அலையின் வேகமும் மிக அதிகமாக இருந்தது. இதனால் மீன் பிடிக்க முடியாத காரணத்தால் தூத்துக்குடிக்கே செல்ல முடிவு செய்து படகில் புறப்பட்டோம். ஆனால் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் தொடர்ந்து செல்ல முடியாமல் படகை மண்டபம் பகுதிக்கு திருப்பி பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்தோம்.

படகில் இருந்த சீலா உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்களை வாகனம் மூலமாக தூத்துக்குடியில் உள்ள மீன் கம்பெனிக்கு அனுப்பி வைத்து விட்டோம். காற்றின் வேகமும், கடல் கொந்தளிப்பும் குறைந்த பின்பு மண்டபத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல முடிவு செய்துள்ளோம். அது வரையிலும் படகிலேயே தங்கி இருப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்