நாகையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்

நாகையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-20 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரித்திடலில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு“ விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு“ என்ற இணையதளம், கைபேசி செயலி மற்றும் விழிப்புணர்வு பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள்

நாகை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் “பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு“ உருவாக்கிடும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

நாகை அவுரித்திடலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் தாசில்தார் அலுவலகம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, அரசு போக்குவரத்து கழக பணிமனை, நகராட்சி அலுவலகம் வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பிளாஸ்டிக் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இதில் நாகை தாசில்தார் சங்கர், இ.ஜி.எஸ்.பிள்ளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் பரமேஸ்வரன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்