அரசை நடத்துவதற்கு பதிலாக குமாரசாமி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எடியூரப்பா பேட்டி

பெரும்பான்மை பலம் இல்லாமல் அரசை நடத்துவதற்கு பதிலாக குமாரசாமி தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Update: 2019-07-20 23:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. அதனால் தான் கவர்னர் வஜூபாய் வாலா, பெரும்பான்மையை நிரூபித்து காட்டும்படி முதல்-மந்திரி குமாரசாமிக்கு 2 முறை உத்தரவு பிறப்பித்தார். கவர்னரின் உத்தரவை குமாரசாமி மீறி விட்டார். கவர்னர் உத்தரவுக்கு குமாரசாமி மதிப்பளிக்கவில்லை. கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் இருந்திருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒரே நாளில் நடத்தி முடித்திருப்பார்கள். பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பை இழுத்தடிக்கிறார்கள்.

பெரும்பான்மை இல்லாமல் பெயரளவுக்கு அரசை நடத்துவதற்கு பதிலாக, தானாகவே முன்வந்து முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்ய வேண்டும். சட்டசபையில் அறிவித்தபடி வருகிற திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கண்டிப்பாக நடத்த வேண்டும். இனியும் காலதாமதம் செய்யக்கூடாது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ.28 கோடியை எச்.விஸ்வநாத் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை அடைக்க தான் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர துடிக்கிறார் என்றும் மந்திரி சா.ரா.மகேஷ் கூறி இருப்பது சரியல்ல. அதுபற்றி இத்தனை நாள் சொல்லாமல் இருந்துவிட்டு, தற்போது சா.ரா.மகேஷ் குற்றச்சாட்டு சொல்வது ஏன்?. எம்.எல்.ஏ. பதவியை எச்.விஸ்வநாத் ராஜினாமா செய்திருப்பதால், அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சா.ரா.மகேஷ் கூறி வருகிறார்.

சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பு குழப்பமாக இருப்பதாக கூறிக் கொண்டு கூட்டணி தலைவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு மீண்டும் சென்றுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று நம்புகிறேன். மாநிலத்தில் கடும் வறட்சி, குடிநீர் பிரச்சினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் முதல்-மந்திரி பதவியை காப்பாற்றுவதில் குமாரசாமி கவனம் செலுத்துவது சரியல்ல. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்