சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தொழிலாளி கைது

மணலி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-20 22:11 GMT
திருவொற்றியூர்,

மணலி பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த விஜயனுக்கும், அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விஜயன், மனைவி ஐஸ்வர்யாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் ஐஸ்வர்யா, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு போன் செய்து, தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், உடனே வந்து காப்பாற்றுமாறும் புகார் கூறினார்.

இதையடுத்து மணலி போலீஸ் சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோர் பல்ஜிபாளையம் விரைந்தனர். அங்கு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த விஜயனை தடுத்து நிறுத்தி “ஏன் மனைவியை அடித்து துன்புறுத்துகிறாய்?” என்று தட்டிக்கேட்டனர்.

இதில் விஜயனுக்கும், போலீசாருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த விஜயன், சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீஸ்காரர் ரமேஷ் ஆகியோரை குடிபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உடன் இருந்த சக போலீசார், விஜயனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் கண்ணகி, போலீசாரை தாக்கியதாக விஜயன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்