காட்பாடி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ.3 லட்சம் பறிமுதல் வாகன சோதனையில் சிக்கியது

காட்பாடி அருகே நடந்த வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-21 23:15 GMT
சிப்காட் (ராணிப்பேட்டை),

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படைகள், நிலைக்கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த வாகன சோதனையின் போது ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது.

இதனையடுத்து காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பதும், தொழில் நிமித்தமாக பணம் கொண்டு செல்வதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணம் இல்லை. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல காட்பாடி அருகே உள்ள பொன்னை மாதாந்தகுப்பம் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில் வாகன சோதனை செய்யப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்தனர். அதில் பொன்னையை சேர்ந்த சந்திரசேகரன் (வயது 42), என்ற விவசாயி இருந்தார். அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது. அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

லட்சுமிநாராயணன், சந்திரசேகரன் ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்தை அதிகாரிகள், காட்பாடி தாசில்தார் சுந்தரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்