தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம்

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய பயிர்களை யானைகள் கூட்டம் சேதப்படுத்தியது.

Update: 2019-07-21 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தாவரக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது கேரட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பையப்பா (வயது 40). இவர் தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் தக்காளியும், ஒரு ஏக்கர் நிலத்தில் வெள்ளரிக்காயும், பயிரிட்டு இருந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 10 யானைகள் இவரது நிலத்திற்குள் புகுந்து தக்காளி செடிகளையும், வெள்ளரிக்காய் செடிகளையும் தின்றும், கால்களால் மிதித்தும் நாசப்படுத்தின. நேற்று முன்தினம் காலை பையப்பா தனது தோட்டத்திற்கு சென்றார். அங்கு பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதார்.

இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனச்சரகர் சுகுமார், வனவர் கதிரவன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று சேதமடைந்த பயிர் களை பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு கிடைக்க நடவடிக்கை எடுக் கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இதே போல தாவரக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கெண்டிகானப்பள்ளி கிராமத்தில் பிரகாஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் இருந்த தக்காளி செடிகளை யானைகள் மிதித்து நாசப்படுத்தின. யானைகளால் தொடர்ந்து விவசாய பயிர்கள் சேதமடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்