திருமணம் செய்வதாக கூறி பெண் டாக்டரிடம் ரூ.30 லட்சம் மோசடி பட்டதாரி வாலிபர் கைது

திருமணம் செய்வதாக கூறி, பெண் டாக்டரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-07-21 22:15 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த 28 வயது பெண் டாக்டர், எழும்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார். திருமணமான அவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான முத்துபாண்டி என்ற சந்தோஷ் (வயது 30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. சந்தோஷ், தனக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறினார். அதை நம்பி, சந்தோசுடன் பெண் டாக்டர் பழகி வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து பெண் டாக்டரை திருமணம் செய்து கொள்வதாக கூறிய சந்தோஷ், தான் தொழில் தொடங்க வேண்டும் எனக்கூறி அவரிடம் ரூ.30 லட்சம் மற்றும் 14 பவுன் நகையை பெற்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பரங்கிமலை மகளிர் போலீசில் பெண் டாக்டர், புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர், “என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சந்தோஷ், ரூ.30 லட்சமும், 14 பவுன் நகைகளையும் ஏமாற்றி வாங்கிக்கொண்டார். அவரிடம் பணத்தை திருப்பிக்கேட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக” கூறியிருந்தார்.

இதுபற்றி பரங்கிமலை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்