துவரங்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பஸ்கள் அடுத்தடுத்து மோதியதில் 2 பேர் பலி 7 பேர் படுகாயம்

துவரங்குறிச்சி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது 2 பஸ்கள் அடுத்தடுத்து மோதியதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-07-21 23:00 GMT
வையம்பட்டி,

திருச்சியில் இருந்து இரும்பு கம்பி மற்றும் குழாய் உள்ளிட்டவைகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி அருகே மேனிவயல்-கல்லுப்பட்டிக்கு இடையே லாரி சென்று கொண்டிருந்த போது, லாரி திடீரென பழுதாகி சாலையில் நின்றது. உடனே லாரி டிரைவர் கீழே இறங்கினார்.

அப்போது சென்னையில் இருந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நோக்கி 10 பயணிகளுடன் அந்த வழியாக வந்த அரசு பஸ், திடீரென அந்த லாரி மீது மோதியது. அதே நேரம் அரசு பஸ்சுக்கு பின்னால் வந்த தனியார் பஸ்சும் அரசு பஸ்சின் மீது மோதியது. கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் அரசு பஸ்சின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கி ‘அய்யோ, அம்மா, காப்பாற்றுங்கள்’ என்று அபய குரல் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து தனியார் பஸ்சில் வந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

உடனே துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினரும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அனுஷா மனோகரி (துவரங்குறிச்சி), முத்துக்குமார் (மணப்பாறை) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி மற்றும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மதியழகன், உத்தரபிரதேச மாநிலம் துள்ளாபூரை சேர்ந்த லாரி கிளனர் ராம்பிரவேஷ் பிந்து(வயது 30) ஆகியோர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் சம்பவ இடத்திற்கு வந்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் லாரியை நிறுத்தியதாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமியை(48) கைது செய்தனர். விபத்துக்குள்ளான வாகனங்களை கிரேன் எந்திரம் மூலம் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்