துறையூரில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் 80 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் கொள்ளை

துறையூரில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்து 80 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2019-07-21 23:00 GMT
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்குத்தெரு பெரிய ஏரிக்கரை சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் (வயது 55). அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி(50). இவர்களின் மகன் பிரபு துறையூர் நகராட்சியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். மகள் பிரியா தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தங்வேலும், அவருடைய மனைவியும் வீட்டுக்குள் தூங்கிவிட்டனர். பிரபு, வீட்டின் முன்பக்க கதவை பூட்டாமல் மாடிக்கு சென்று தூங்கிவிட்டார். நேற்று வேலைக்கு செல்வதற்காக காலை 5 மணிக்கு மாடியில் இருந்து வீட்டிற்குள் வந்த பிரபு, குளித்துவிட்டு உடைமாற்றுவதற்காக பூஜை அறைக்கு சென்றார்.

அப்போது, அங்கிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணிகள் எல்லாம் தரையில் கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தனது பெற்றோரை எழுப்பி விவரத்தை கூறினார். அவர்கள் விரைந்து வந்து பூஜை அறையின் மேல் பகுதியில் இருந்த நகைப்பெட்டியை திறந்து பார்த்த போது, அதில் இருந்த 80 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயி ருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கவேல் இதுபற்றி துறையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நேற்று இரவு தங்கவேல் குடும்பத்தினர் வீட்டின் கதவை பூட்டாமல் தூங்க சென்றதும், இதை பயன்படுத்திய மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றதும் தெரிய வந்தது.

இதைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்