பெரம்பலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 2,485 பேருக்கு பணிநியமன ஆணை

பெரம்பலூரில் நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 2,485 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2019-07-21 23:00 GMT
பெரம்பலூர்,

நீண்ட காலமாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களின் நலனை கருதி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அறிவுரையின் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்வேலை வாய்ப்பு முகாமும், காலாண்டிற்கு ஒரு முறை மாபெரும் தனியார்வேலை வாய்ப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார்வேலை வாய்ப்பு முகாம் நேற்று பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள 116 முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை நேர்க்காணல் நடத்தி தேர்வு செய்தனர்.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வேலை வாய்ப்பு முகாம் மாலை 3 மணி வரை நீடித்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள், என்ஜினீயரிங் முடித்தவர்கள் என அனைத்து தரப்பினரும் என மொத்தம் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இதனால் வேலை வாய்ப்பு முகாம் ஏதோ திருவிழா நடப்பது போல் கூட்டமாக காணப்பட்டது.

பணிநியமன ஆணைகள்

படித்த படிப்புக்கு ஏற்றவாறு வேலைக்கான நேர்க்காணல் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. வேலை வாய்ப்புக்கான நேர்க்காணலில் 21 மாற்றுத்திறனாளிகள் உள்பட 2 ஆயிரத்து 485 பேர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டனர். அடுத்து கட்ட தேர்வுக்கு 481 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு 373 பேர் பதிவு செய்தனர். இதையடுத்து வேலைக்கான பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டார். அவர் தனியார்மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார். இதில் வேலை வாய்ப்புத்துறை உதவி இயக்குனர் பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி முரளிதரன், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்