ஆசிரியர்கள், மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் கல்வி அதிகாரி ராகவன் பேச்சு

ஆசிரியர்கள், மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரி ராகவன் பேசினார்.

Update: 2019-07-21 22:15 GMT
புதுக்கோட்டை,

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய புத்தகம் குறித்த பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட கல்வி அதிகாரி ராகவன் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆசிரியர்கள், தமக்கு தெரிந்தவற்றை மாணவர்களிடம் கற்பிக்கும்போது அதனை எளிமையாக்கி கூற வேண்டும். மாணவர்களிடம் நல்ல அணுகுமுறையை வளர்த்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது இன்றைய காலத்திற்கேற்ப தகவல்களை சேகரித்து செல்ல வேண்டும். குறிப்பாக கணினி அறிவை ஆசிரியர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.

செய்யுள் பகுதியை ராகத்தோடு கற்றுக் கொடுக்க வேண்டும். மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த தனிப்பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் சுயகற்றலை ஊக்குவிக்க வேண்டும்.

சிந்திக்கும் திறன்

ஆசிரியர்கள், இங்கு எடுக்கும் பயிற்சியை மாணவர்களிடம் நல்லமுறையில் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் பயிற்சியின் நோக்கம் நிறைவேறும். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் முன்னேறி உள்ளோம். அதற்காக உழைத்த ஆசிரியர்களை பாராட்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பள்ளிதுணை ஆய்வாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும் செய்திகள்