மண்மங்கலம் தேசியநெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-07-21 22:45 GMT
கரூர்,

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்மங்கலம் வட்டக்கிளையின் மாநாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மண்மங்கலம் வட்டக்கிளை தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். கிருஷ்ணவேணி, தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டில், மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விபத்துகளை தடுக்கும் பொருட்டு மேம்பாலம் அல்லது சுரங்க வழிப்பாதை அமைத்து தர வேண்டும்.

மண்மங்கலம் தாலுகாவில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். மண்மங்கலம் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருந்துகள் பெறுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். மண்மங்கலம் தாலுகாவில் பழுதடைந்த சத்துணவு கூடங்களை சரி செய்து தர வேண்டும். மண்மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மீண்டும் பணியமர்த்த வேண்டும்

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட செவிலியர் சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்த வேண்டும்.

மண்மங்கலம் தாலுகாவில் வீட்டு வசதி வாரியம் மூலம் சொந்த வீட்டு குடியிருப்புகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட இணை செயலாளர் கருணாகரன், செயலாளர் முத்துகுமார் மற்றும் நிர்வாகிகள் மகாவிஷ்ணன், அறிவழகன், செல்வராணி உள்பட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணை தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்