அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் - அதிகாரியிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. புகார்

ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அரசு பஸ்களில் தனியார் பஸ்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை சுட்டிக்காட்டி அதிகாரியிடம் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்துள்ளார்.

Update: 2019-07-21 23:00 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையத்தில் இருந்து மதுரைக்கு ஏராளமான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல தனியார் பஸ்களும் சென்று வருகின்றன. அரசு பஸ்களில் பெரும்பாலானவை ஓட்டை உடைசலாக இருக்கும் நிலையில் கட்டணத்தில் வேறுபாடு இருக்கிறது. அரசு பஸ்களில் ரூ.85 வசூலிக்கும் நிலையில் தனியார் பஸ்களிலோ ரூ.65 மட்டுமே வசூலிக்கின்றனர். இதனால் அரசு பஸ்களை பயணிகள் புறக்கணிக்கும் நிலை இருக்கிறது.

ஆனாலும் போதுமான அளவுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படாததால் கூடுதல் கட்டணம் செலுத்தி அரசு பஸ்சில் பயணிக்க வேண்டியுள்ளது. இதனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டி, சென்னையில் போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். தனியார் பஸ்சுக்கு இணையாக அரசு பஸ்களிலும் ரூ.65 வசூலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இதுகுறித்து தங்கப்பாண்டியன் கூறுகையில், போக்குவரத்து துறை அமைச்சரின் கவனத்திற்கு கோரிக்கையை கொண்டு சென்று கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி அளித்ததாக தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டசபை வளாகத்தில் சந்தித்து ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரி அதிக அளவில் வசூல் செய்யப்படுவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்