சிறுவர் பூங்காவை ஆக்கிரமித்து பழத்தோட்டம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

காஞ்சீபுரத்தில் சிறுவர் பூங்காவை ஆக்கிரமித்து பழத்தோட்டம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-07-22 23:00 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய பெருமாட்டு நல்லூர் ஊராட்சியில் உள்ள கன்னிவாக்கம் சாந்தாதேவி நகர் உள்ளது. இந்த நகரில் 354 வீட்டு மனைகள் இருக்கிறது. சிலர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவற்காக சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பாரதி பொது விளையாட்டு பூங்கா உள்ளது.

இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாடுவதற்கென்று மிக பெரிய பூங்காவாக இது மட்டுமே அமைந்துள்ளது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பல லட்சம் மதிப்பில் இங்குள்ள பூங்காவில் பழத்தோட்டம் வைக்க முடிவு செய்துள்ளது.

மேலும், அதற்காக பூங்காவில் சிறுவர்களுக்கு விளையாடுவதற்கும், முதியவர்களுக்கு நடைப்பயிற்சி செல்வதற்கும் கூட இட வசதி இல்லாமல் பூங்கா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி உள்ளனர்.

இதனால் பாரதி பூங்கா முழுவதும் பழத்தோட்டம் அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அவசர அவசரமாக பணிகளை தொடங்கி இருக்கின்றனர்.

எனவே, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா சம்பந்தப்பட்ட ஊராட்சியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ள பாரதி பூங்காவை சுற்றி மரக்கன்றுகள் நடலாம், ஆனால் அதை செய்யாமல் சிறுவர்கள் விளையாடுவதற்கு கொஞ்சம் கூட பூங்காவில் இடம் விடாமல் பூங்கா முழுவதும் பழத்தோட்டம் அமைக்கக்கூடாது என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தங்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஊராட்சியில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் சரியான முறையில் பராமரிக்க தவறியதால் மரக்கன்றுகள் கருகி காணாமல் போய்விட்டது வருத்தம் அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்