குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-07-22 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

கெலமங்கலம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியலட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரியலட்சுமிபுரம் கிராமத்தில் 80-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆழ்துளை குழாய் கிணறுகள் வறண்டும், பழுதாகி 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கி வருகின்றனர். அதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. புதிய ஆழ்துளை குழாய் அமைத்து தரக் கோரி, சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். மழையில்லாமல் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளும் வறண்டுள்ளதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய ஆழ்துளை குழாய் கிணறுகள் அமைத்தும், சீராக குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்