வெண்ணந்தூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

வெண்ணந்தூர் அருகே கோவிலின் பூட்டை உடைத்து நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2019-07-22 23:00 GMT
வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே ஓ.சவுதாபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் இந்த கோவிலுக்குள் நுழைந்து உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடி சென்றனர். இங்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ வெள்ளி பொருட்களை அவர்கள் திருடி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள மற்றொரு மாரியம்மன் கோவில், அலவாய்மலையில் உள்ள முருகன் கோவிலின் பூட்டை உடைத்தும் திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கு நகை, பணம் எதுவும் இல்லாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

நேற்று காலையில் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இது குறித்து வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று கோவிலில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்