பல்லடத்தில் மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்; அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சமரசம்

பல்லடத்தில் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவ–மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை அழைத்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சமரசம் செய்தார்.

Update: 2019-07-22 22:45 GMT

பல்லடம்,

அரசு பள்ளிகளில் பிளஸ்–1, பிளஸ்–2 படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதில் மடிக்கணினி கிடைக்காத முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு மடிக்கணினி வழங்கக்கோரி அந்தந்த பகுதிகளில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ., ஆர்.டி.ஓ. செண்பகவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பெ.சாந்தா வரவேற்று பேசினார்.

விழாவில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார். இதில் 9 பள்ளிகளை சேர்ந்த 2,581 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பல்லடம் ஆனந்தி நன்றி கூறினார். விழாவில் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிவாச்சலம், தண்ணீர்ப் பந்தல் நடராஜன், சித்து ராஜ், ஆறுமுகம், கல்லம்பாளையம் ராமமூர்த்தி, வைஸ்.பி.கே.பழனிசாமி, சொக்கப்பன், பானு பழனிசாமி, 63.வேலம்பாளையம் முருகசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் விழா முடிந்ததும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது 2017–2018 மற்றும் 2018–2019–ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்–1, பிளஸ்–2 படித்த முன்னாள் மாணவர்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி பல்லடம்–மங்கலம் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் சமாதானம் அடையாத மாணவ–மாணவிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அமைச்சரை சந்தித்து முறையிட முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் அங்கிருந்து விருந்தினர் மாளிகையில் இருந்த அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனை சந்தித்து முன்னாள் மாணவர்களான தங்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறினார்கள். அவர்களை சமரசம் செய்த அமைச்சர் விரைவில் மடிக்கணினிகள் வழங்க ஆவண செய்வதாக கூறினார். இதன் காரணமாக சமாதானம் அடைந்த முன்னாள் மாணவ–மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவ–மாணவிகளின் இந்த போராட்டம் காரணமாக அந்தபகுதியில் சிறிது நேரம் பரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்