மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பெண்கள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு பெண்கள் திரண்டு வந்தனர். அவர்கள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-07-22 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

அப்போது உடன்குடி ஒன்றியம் செம்மறிக்குளம் கல்விளை கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் உள்ளன. எங்கள் ஊருக்கு அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்த ஆழ்துளை கிணறு கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை. இதனால் அதன் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தேக்கி வைத்து பயன்படுத்தலாம் என்பதற்காக, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை ஆழ்துளை கிணறு அமைக்கப்படவில்லை. எனவே உடனடியாக புதிய ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை சேமித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவில் முன்பு அனுமதியின்றி பல கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காலணிகளை கழற்றி விட முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே கோவில் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும். அதே போல் ஸ்ரீவைகுண்டம் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழர் தேசிய கொற்றம் சார்பில் அதன் தலைவர் வியனரசு கொடுத்த மனுவில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை தொடர்பாக அனைத்து தரப்பு மக்களுக்கும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை சொல்ல உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் கொடுத்த மனுவில், தருவை விளையாட்டு மைதானத்தில் மேடுபள்ளமாக இருக்கும் கால்பந்து மைதானத்தை சரிசெய்ய வேண்டும். அங்கு உள்ள மின்கம்பங்களை பராமரிக்க வேண்டும். தடகளம் மைதானத்தை சீரமைக்க வேண்டும். ஆக்கி விளையாட்டு மைதானத்தை உருவாக்க வேண்டும்.

ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் குளம் பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் சங்க தலைவர் அலங்காரம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள வெள்ளூர் குளத்தில் தண்ணீர் வற்றி 4 மாதங்கள் ஆகிறது. விரைவில் வர இருக்கும் பருவமழைக்கு முன்பு குளத்தில் உள்ள மடைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

விளாத்திகுளம் தாலுகா சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த சண்முகலட்சுமி மற்றும் தமிழ் புலிகள் கட்சி சார்பில் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். சண்முகலட்சுமி கொடுத்த மனுவில், எனது கணவர் ராமமூர்த்தி இறந்து விட்டார். எனக்கு ஒரு மகன், ஒரு மகள். எனது மகள் கிருஷ்ணவேணி படித்து முடித்து விட்டு சங்கரலிங்கபுரம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணவேணி மாயமானார்.

இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 5-ந் தேதி சங்கரலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் இருந்து வந்த காவலர் ஒருவர் விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி அருகே எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாகவும் அதன் அருகே வீட்டு சாவி மற்றும் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். அது என் மகளாக இருக்குமோ என்ற பயம் எனக்கு உள்ளது. ஆனால் இதுகுறித்து பந்தல்குடி போலீசார் அதனை உறுதி செய்ய காலதாமதம் செய்கிறார்கள். எனவே என் மகள் உயிரோடு இருந்தால் அவளை உடனடியாக கண்டுபிடித்து தர வேண்டும். அல்லது இறந்த நிலையில் கிடந்தது எனது மகள் என்றால் அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வாகனத்தின் மீது ஏறி காவலர் துப்பாக்கி சூடு நடத்தினார் என்பது கற்பனை கதை என்று கூறியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது சி.பி.ஐ. கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வாகனத்தில் ஏறி துப்பாக்கி சூடு நடத்திய காவலரை கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்