மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தம்; நிதி வழங்க ஆதிவாசி மக்கள் கோரிக்கை

மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-07-22 22:45 GMT
கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பிரதம மந்திரியின் வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 600 ஆதிவாசி மக்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவில் வீடுகள் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பயனாளிகளிடம் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு தொகை வழங்கப்படாததால், பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் கொட்டமேடு உள்பட சுமார் 10 கிராமங்களை சேர்ந்த ஆதிவாசி மக்கள் நேற்று மதியம் 12 மணிக்கு தேவர்சோலை பேரூரா£ட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் செயல் அலுவலர்(பொறுப்பு) வேணுகோபாலனிடம் வீடுகள் கட்டுவதற்கான மீதமுள்ள தொகையை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பழைய வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிதி மட்டுமே வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகை கிடைக்கவில்லை. இதனால் கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 1 ஆண்டாக குடிசைகளில் வசித்து வருகின்ற சூழலில் இதுவரை வீடுகள் கட்டும் பணி நிறைவு பெறவில்லை. இதனால் வீடுகள் கட்டும் திட்டத்தில் தர வேண்டிய மீதமுள்ள தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு செயல் அலுவலர்(பொறுப்பு) பதிலளித்தபோது, வீடுகள் கட்டுவதற்கான நிதி உயரதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து விட்டு உடனடியாக நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று ஆதிவாசி மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்