ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து பள்ளிக்கூடத்தை பொதுமக்கள் முற்றுகை

சுரண்டை அருகே ஆசிரியர் பணியிட மாற்றத்தை கண்டித்து பள்ளிக்கூடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-22 21:45 GMT
சுரண்டை, 

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்துள்ளது குலசேகர மங்கலம் கிராமம். இங்கு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 124 மாணவர்கள் படித்து வருகின்றனர். 4 இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்கூட மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்ததை தொடர்ந்து பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய ஒரு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் நேற்று பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர் இடமாற்றத்தை கண்டித்தும், பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் வேண்டும், உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், 2 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. அதனை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து, ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்