புதுக்கோட்டையில் வக்கீல் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சாலை மறியல்

வக்கீல் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டையில் நேற்று வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வக்கீல்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2019-07-22 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த வக்கீல் முத்தரசன் மீது ஆலங்குடி போலீசார் ஒரு பெண் கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை வக்கீல் சங்க நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேச சென்றனர். அப்போது வக்கீல் சங்க நிர்வாகிகளை சந்திப்பதை போலீஸ் சூப்பிரண்டு பணி நிமித்தமாக தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் வக்கீல்கள் சங்க கூட்டம் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததும், வக்கீல்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை-மதுரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஆலங்குடியை சேர்ந்த வக்கீல் முத்தரசனை தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

மேலும் அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது , அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறினார்கள். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் அங்கிருந்து புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை

அதன் பின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வக்கீல்கள் சிலரை தனது அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் எனக்கூறிவிட்டு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்