ஓய்வூதியர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு

ஓய்வூதியர்கள் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2019-07-22 23:00 GMT
சிவகங்கை,

மாவட்ட கருவூலத்துறை சார்பில் ஓய்வூதியர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- அரசு அலுவலர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களின் பணி ஓய்விற்கு பின்னர் அவர்களுக்கு கிடைக்கும் பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதிய தொகை எளிதாக கிடைக்கும் வகையில் அரசு அறிவுரையின்படி இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் ஓய்வூதியதாரர்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உரிய முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட 39 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இனி வருங்காலங்களில் துறைத் தலைவர்கள் ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வூதிய பலன்கள் எளிதாக கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களிடமிருந்து 24 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஓய்வூதிய பிரிவு இணை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் மதிவாணன், மாவட்ட கருவூல அலுவலர் ராமலெட்சுமி, கூடுதல் கருவூல அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கணக்குகள்) சீனிகணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்