மாணவ-மாணவிகளுக்கு ரூ.53¾ கோடியில் விலையில்லா மடிக்கணினி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

2018-19-ம் ஆண்டு பிளஸ்-2 படித்த, நடப்பாண்டு பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.53¾ கோடி மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

Update: 2019-07-22 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (திருச்சி) சின்னராசு வரவேற்று பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு 2018-19-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்து முடித்த 21,311 மாணவ-மாணவிகளுக்கும், 2019-20-ம் ஆண்டில் பிளஸ்-1 படிக்கும் 20 ஆயிரத்து 873 மாணவ-மாணவிகள் என 42 ஆயிரத்து 184 பேருக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் பணியை தொடங்கி வைத்தனர்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

ரூ.53¾ கோடி மதிப்பீடு

தமிழகத்தில் நடப்பாண்டில்(2019-20) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு விட்டது. 2019-20-ம் ஆண்டில் பிளஸ்-1 படிப்பவர்களுக்கும், 2018-19 ஆண்டில் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு 3 மாத காலத்திற்குள் அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்ற அரசாணையை கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பள்ளியில் 2019-20-ம் ஆண்டில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கப்பட்டது. தற்போது 2018-19-ல் பிளஸ்-2 முடித்த 21,311 பேருக்கும், நடப்பாண்டில் (2019-20) பிளஸ்-1 படிக்கும் 20,873 பேருக்கும் என ரூ.53 கோடியே 87 லட்சத்து 74 ஆயிரத்து 48 மதிப்பீட்டில் விலையில்லா மடிக் கணினி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கும் அமைச்சர்கள் மடிக்கணினி வழங்கினர்.

நிகழ்ச்சியில் திருச்சி ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜலிங்கம்(மணப்பாறை), அறிவழகன்(லால்குடி), பள்ளி தலைமை ஆசிரியர் ஞான சுசிகரன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்