குமாரபுரம் அருகே துணிகரம் காண்டிராக்டர் வீட்டில் 7 பவுன் நகை, பணம் கொள்ளை

குமாரபுரம் அருகே காண்டிராக்டர் வீட்டின் கதவை உடைத்து 7¼ பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-07-22 23:00 GMT
பத்மநாபபுரம்,

தக்கலையை அடுத்த குமாரபுரம் அருகே உள்ள முட்டைக்காடு, கிருஷ்ணன்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 51), சவுதி அரேபியாவில் கட்டிட காண்டிராக்டராக உள்ளார். இவர் மனைவி உஷாவுடன் (45) வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகளை சென்னையில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

ஒரு மகளும், மகனும் கேரளாவில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகிறார்கள். இதனால், ஊரில் உள்ள இவர்களது வீடு எப்போதும் பூட்டி கிடக்கும்

இந்த வீட்டின் அருகே முருகனின் தந்தை நடராஜபிள்ளை (80) வசித்து வருகிறார். இவர் தினமும் மாலையில் முருகனின் வீட்டுக்கு சென்று மின்விளக்கை போட்டுவிட்டு மறுநாள் காலையில் சென்று அணைப்பது வழக்கம். வழக்கம் போல் நேற்று காலையில் நடராஜபிள்ளை மின்விளக்கை அணைக்க சென்றார்.

நகை- பணம் கொள்ளை

அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் படுக்கை அறைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு, அங்கு இருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. மேலும், பீரோக்களில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

இதுகுறித்து கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். சவுதி அரேபியாவில் உள்ள முருகனை தொடர்பு கொண்டு வீட்டில் இருந்த நகை, பணம் குறித்த விவரங்களை கேட்டனர். அப்போது, வீட்டில் 15 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக கூறினார்.

இதையடுத்து போலீசார் வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு 7¼ பவுன் நகை, ரூ.15 ஆயிரத்தை காணவில்லை. அதை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

ரகசிய அறை

வீட்டின் மேல் மாடியில் ரகசிய அறையில் இருந்த 7¾ பவுன் நகை கொள்ளையர்கள் கண்ணில் சிக்காததால் தப்பியது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து கொற்றிகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்