வெடியங்காடு கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல்

வெடியங்காடு கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வந்த எம்.எல்.ஏ. திரும்பிச்சென்றார்.

Update: 2019-07-23 23:00 GMT

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வெடியங்காடு கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அவதிப்பட்ட பொதுமக்கள் தங்கள் பிரச்சினையை ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கவனத்திற்கும், ஊராட்சி செயலாளர் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் கோபம் அடைந்தனர். இந்த நிலையில் இந்த கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் நேற்று மாலை வருவதாக கிராம மக்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கிராம மக்கள் காலிகுடங்களுடன் தங்கள் கிராமத்தில் உள்ள சக்தியம்மன் கோவில் அருகே காலிகுடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் எம்.எல்.ஏ. நரசிம்மனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பாதிவழியில் திரும்பி சென்றார். எம்.எல்.ஏ. வருவார் என்று காலிகுடங்களுடன் காத்திருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் பொதுமக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த வழித்தடத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்