அரிமளம், ஆலங்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

அரிமளம், ஆலங்குடியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Update: 2019-07-23 23:00 GMT
அரிமளம்,

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 21 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரெத்தினசபாபதி வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 21 பள்ளிகளை சேர்ந்த 7014 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் தமிழகத்தில் மட்டும் தான் செயல்படுத்தப்படுகிறது. மாணவ-மாணவிகள் மீது அக்கரை கொண்ட மறைந்த முதல்-அமைச்சர் ஜெய லலிதா படிப்பிற்கு தேவையான 14 வகையான உபகரணங்களை வழங்கி உள்ளார். கிராமங்களில் கடைகோடியில் இருக்கும் மாணவ, மாணவிகளின் கைகளிலும் மடிக்கணினி தற்போது காண முடியும்.

தமிழக அரசின் திட்டங்களை பெறும் நீங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என கேட்டு கொள்கிறேன். பெண்கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கல்லூரி வரை படித்திருந்தால் திருமணத்தின் போது 1 பவுன் தங்கம் ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது என்று கூறினார். விழாவில் அரிமளம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கடையக்குடி திலகர், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சந்திரன், முன்னாள் ஒன்றிய குழுதலைவர் கணேசன், முன்னாள் அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரியப்பன் உள்பட திரளான முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.

ஆலங்குடியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 22 மேல் நிலைப்பள்ளிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு 7,805 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி பேசினார். இதில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. ராஜா நாயகம், மாவட்ட செயலாளர் வைரமுத்து, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக எல்.என்.புரம். பள்ளி மாணவி புனிதாவின் பேச்சு திறமையை பாராட்டி ரூ.2 ஆயிரத்தை பரிசாக அமைச்சர் வழங்கினார். முடிவில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அதிகாரி திராவிடச்செல்வம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்