பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது

லாத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் நிலுவையில் உள்ள தனது ஊதியத்தொகையான ரூ.47 லட்சத்து 44 ஆயிரத்தை வழங்குமாறு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியான சிவநாத் மிங்கிர்(வயது35) என்பவரிடம் கேட்டார்.

Update: 2019-07-24 23:15 GMT
அவுரங்காபாத், 

 சிவநாத் மிங்கிர் நிலுவையில் உள்ள ஊதியத்தை தரவேண்டும் என்றால் தனக்கு ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கூறினார். மேலும் முதல் தவணையாக ரூ.7 லட்சம் தரவேண்டும் என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியிடம் புகார் அளித்தார். அவர்களது யோசனையின் பேரில் ஆசிரியர் ரூ.7 லட்சத்தை எடுத்துக்கொண்டு பார்சி சாலையில் உள்ள ஓட்டல் சஞ்சய் குவாலிட்டிக்கு சென்றார். 

அங்கு சிவநாத் மிங்கிர்க்கு பதிலாக மாவட்ட மாற்றுத்திறனாளி பள்ளிகள் துறை செயலாளர் உமாகந்த தாப்சாலே(52) என்பவர் இருந்தார். பின்னர் ஆசிரியரிடம் இருந்து உமாகந்த தாப்சாலே பணத்தை வாங்கும்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு சிவநாத் மிங்கிரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து சிவாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்