தர்மபுரியில் 53 அரங்குகளுடன் புத்தக திருவிழா கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் 53 அரங்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள 2-ம் ஆண்டு புத்தக திருவிழாவை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-26 23:15 GMT
தர்மபுரி,

தகடூர் புத்தக பேரவை சார்பில் 2-ம்ஆண்டு புத்தக திருவிழா தர்மபுரி பாரதிபுரத்தில் அமைந்துள்ள மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. புத்தக திருவிழாவை தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புத்தக அரங்குகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் திறந்து வைத்தார். முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், கல்லூரி கல்வி இணை இயக்குனர் சகுந்தலா, தர்மபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமசாமி, புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர் சிசுபாலன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் புத்தக திருவிழா மலரை கலெக்டர் மலர்விழி வெளியிட விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் இயக்குனர் தீபக் மணிவண்ணன் பெற்று கொண்டார்.

இந்த விழாவில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு 62 சதவீதமாக இருந்த எழுத்தறிவு தற்போது 92 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த மாவட்டத்தில் பிளஸ்-2 படிப்பை முடித்தபின் கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி கற்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 98 சதவீதத்திற்கும் அதிகம். எனவே தர்மபுரி மாவட்டத்தை பின்தங்கிய மாவட்டம் என்று இனிமேல் யாரும் அழைக்கக்கூடாது. இது மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் மாவட்டம். உடல் நலத்திற்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ அதேபோல் உள்ளத்தின் நலனுக்கு புத்தகம் வாசிக்கும் பயிற்சி அவசியம். பள்ளி,கல்லூரிகளில் கற்பிக்கும் முறைசார்ந்த கல்வியோடு, பல்வேறு வகையான புத்தகங்கள் மூலம் கிடைக்கும் பொதுக்கல்வி ஒவ்வொரு மனிதனின் மேம்பாட்டிற்கும் மிகவும் அவசியம்.

தங்கள் துறைகளில் உலக அளவில் மிகப்பெரிய சாதனை படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் உள்ளிட்ட பலர் புத்தகங்கள் மூலமாகவே தங்களுடைய முன்மாதிரிகளை கண்டறிந்து கொண்டனர். பல்வேறு சாதனையாளர்கள், சிந்தனையாளர்களின் வாழ்க்கை அனுபவங்களை புத்தக வாசிப்பு பழக்கம் மூலம் நாம் அறிந்து கொள்ளும்போது வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்வதற்கான வலிமை கிடைக்கும். பாடபுத்தகங்களுக்குள் மாணவர்களை கட்டிப்போடாமல் பல்வேறு வகையான புத்தகங்களை வாசிக்க இளம் வயதிலேயே ஊக்குவிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அதை அறிந்து அதற்கேற்ற புத்தகங்களை இந்த புத்தக திருவிழாவின் மூலம் வாசிக்க செய்வது ஆசிரியர்களின் கடமை.

இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.

இந்த புத்தக திருவிழாவில் தினத்தந்தி பதிப்பகம் உள்பட பல்வேறு முன்னணி பதிப்பகங்கள் சார்பில் 53 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்று உள்ளன. வருகிற 4-ந்தேதி வரை நடக்கும் புத்தக திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடக்க விழாவில் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன், ஓய்வு பெற்ற அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் வரவேற்பு குழு நிர்வாகிகள், பள்ளி,கல்லூரி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்