பரங்கிப்பேட்டையில், வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது - நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மீட்பு

பரங்கிப்பேட்டையில் வீடு புகுந்து நகைகளை திருடியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை போலீசார் மீட்டனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-26 22:45 GMT
கடலூர்,

கடலூர் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீர்த்தாம்பாளையம் என்ற இடத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் இருவரும், விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் விரியூர் அருகே உள்ள பழையனூர் காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்கிற ராஜா(வயது 41), கம்மாபுரம் சிறுவரப்பூர் ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்த கண்மணிராஜா(32) என்பதும், அவர்கள் வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

இதனால் இருவரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரித்தனர். பரங்கிப்பேட்டை ஆனையங்குப்பத்தில் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் இவர்கள் இருவரும் புகுந்து, அங்கிருந்த மோட்டார் சைக்கிள், 3 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றதும் தெரியவந்தது., இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 3 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை மீட்டனர்

மேலும் நாகை மாவட்டம் பொறையார் போலீஸ் சரகத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து இருவரும் திருடிய எல்.இ.டி., டி.வி., மடிக்கணினி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

பழைய குற்றவாளிகளான இருவரும் கடலூர் மத்திய சிறையில் இருந்த போது ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் ஒன்றாக சேர்ந்து பரங்கிப்பேட்டை மற்றும் பொறையாரில் திருடி உள்ளனர். இவர்களில் அந்தோணிராஜ் மீது கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், வடபொன்பரப்பி, ஆலடி, சிதம்பரம் தாலுகா ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகளும், கண்மணிராஜா மீது அவரது மனைவி ஜமுனாராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரது 6 மாத பெண்குழந்தையை கொலை செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்