சீர்காழியில், 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

சீர்காழியில், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையின் பேரில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-07-26 23:00 GMT
சீர்காழி,

சீர்காழியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் சீர்காழி நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் உத்தரவின்படி பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், நகர அமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் மோகன், வருவாய் ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கடைகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன்படி சீர்காழி பழைய பஸ் நிலையம், தேர் வடக்கு வீதி, கடைவீதி, தென்பாதி, தாடாளன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.

அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அலுவலர்கள், சுமார் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.

இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அழித்தனர். அப்போது நகராட்சி ஆணையர் கூறுகையில், சீர்காழி நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

மேலும் செய்திகள்