கூடுதல் இழப்பீடு கேட்டு விளை நிலங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் - காட்டுமன்னார்கோவில் அருகே பரபரப்பு

காட்டுமன்னார்கோவில் அருகே விளைநிலங்களில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-26 22:30 GMT
காட்டுமன்னார்கோவில், 

திருச்சி-சிதம்பரம் இடையே தேசிய நெடுஞ்சாலை 138 கிலோ மீட்டர் நீளமுடையது. இதில் சிதம்பரத்தில் இருந்து மீன்சுருட்டி வரை உள்ள 34 கிலோ மீட்டர் தூரம் சாலையை அகலப்படுத்த கடந்த 2 ஆண்டுகளாக நிலங்கள் அளவீடு மற்றும் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் குமராட்சி பகுதியில் எள்ளேரி, வீரநத்தம், குறுங்குடி, கண்டமங்கலம், வீராணநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தினை கையகப்படுத்தியதில் அதிகாரிகள் முறையாக செயல்படவில்லை எனவும், குறைந்தளவு இழப்பீட்டு தொகை வழங்குவதாகவும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நகாய் நிறுவனத்தின் சென்னை மண்டல அதிகாரி பவுன்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று காலை காட்டுமன்னார்கோவிலுக்கு வந்து, கையகப்படுத்திய நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது பற்றி அறிந்ததும் வீராணநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த மண்டல அதிகாரி பவுன்குமாரிடம் விவசாயிகள் கருப்பு கொடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள், இழப்பீட்டு தொகையை உயர்த்தி தர வேண்டும், குறிப்பிட்ட அளவு மட்டுமே நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றனர். அதற்கு மண்டல அதிகாரி பவுன்குமார், அருகில் உள்ள நிலத்திற்கு இழப்பீட்டு தொகை எவ்வளவு வழங்கப்பட்டுள்ளதோ, அதே தொகை வழங்கப்படும். சாலையை மாற்றம் செய்வது என்பது சாத்தியம் இல்லை என்றார். ஆய்வின்போது விழுப்புரம் நகாய் திட்ட அலுவலர் சிவாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் மங்களம் மற்றும் நகாய் திட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்