அகஸ்தியன்பள்ளியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளியில் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-27 22:45 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியன்பள்ளி உள்ளது. உப்பு உற்பத்தியில் தூத்துக்குடிக்கு அடுத்தப்படியாக 2-வது இடத்தில் அகஸ்தியன்பள்ளி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலால் கடல் சேறு உப்பளங்களில் படிந்தது. இதை தொடர்ந்து உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் கஷ்டப்பட்டு சேற்றை அகற்றி உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பிறகு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கடுமையான காற்று வீசியதால் கடல் நீர் உப்பள பகுதியில் புகுந்து பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு இயற்கை காரணங்களால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு குறைந்த அளவில் உப்பு இருப்பு உள்ளது.

உப்பு உற்பத்தி பாதிப்பு

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் அகஸ்தியன்பள்ளியில் உள்ள உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்யாவிட்டால் உப்பு உற்பத்தி செய்ய ஒருவார காலமாகும். மேலும் குறைந்த அளவு உப்பு இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கலாம் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்