காதலியை திருமணம் செய்ய முடியாததால் துணி ஏற்றுமதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலியை திருமணம் செய்ய முடியாததால் துணி ஏற்றுமதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-27 22:30 GMT
சேலம், 

சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் பிரேம் குமார் (வயது 22). இவர் சேலம் அருகே ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் படித்து வந்தார். ஆனால் அவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். பின்னர் பிரேம்குமார் சேலத்தில் உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் நேற்று வீட்டில் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் செவ்வாய்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரேம்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரேம்குமார் இளம்பிள்ளையில் உள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றும் போது அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இதையடுத்து அவர், தனது காதலை வீட்டில் தெரிவித்து காதலியுடன் திருமணம் செய்து வைக்குமாறு கூறி உள்ளார்.

அப்போது பெற்றோர் அவரிடம், உனக்கு தற்போது நேரம் சரியில்லை என்றும், 25 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் காதலியை திருமணம் செய்ய முடியாத மனவேதனையில் இருந்த பிரேம்குமார் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்