நாகர்கோவிலில் கார் மீது கேரள அரசு பஸ் மோதியது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு

நாகர்கோவிலில் கார் மீது கேரள அரசு பஸ் மோதியது. இந்த விபத்து காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-28 23:00 GMT
நாகர்கோவில்,

இரணியல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நேற்று தன் குடும்பத்தினருடன் நாகர்கோவில் வந்தார். பின்னர் டெரிக் சந்திப்பில் சாலை ஓரம் காரை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்கினார். அதன் பிறகு மீண்டும் புறப்பட்ட போது பின்னால் வந்த கேரள அரசு பஸ் எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் கார் லேசாக சேதம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் காரை நடுரோட்டில் நிறுத்தி விட்டு கேரள பஸ் டிரைவரிடம் தகராறு செய்தார்.

ஆனால் அரசு பஸ் டிரைவர் பஸ்சை விட்டு வெளியே வரவில்லை. இதன் காரணமாக அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு கேரள பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கார் நடுரோட்டில் நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெரிக் சந்திப்பில் இருந்து பால் பண்ணை வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. இதை தொடர்ந்து கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட கார் டிரைவரிடம் சமாதானம் பேசி காரை ரோட்டில் இருந்து அப்புறப்படுத்தினர்.

அதன் பிறகு போக்குவரத்து மெல்ல, மெல்ல சரியானது. இதனையடுத்து காரையும், பஸ்சையும் கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வருமாறு போலீசார் தெரிவித்தனர். இதனால் கேரள பஸ்சில் இருந்த பயணிகளுக்கு மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்