சிதம்பரத்தில், கத்தி முனையில் பேராசிரியர் தம்பதியிடம் 9 பவுன் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கைவரிசை

சிதம்பரத்தில் பேராசிரியர் தம்பதியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகையை பறித்து சென்று விட்டனர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-07-28 22:45 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் கனகசபை நகர் 4-வது குறுக்குதெருவை சேர்ந்தவர் சாய்ரூபன். இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தோட்டக்கலை துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி செமினா ஜாஸ்மின் (வயது 47). சிதம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து 9.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் போல்நாராயணன் தெரு- எஸ்.பி.கோவில் தெருமுனை அருகில் சென்ற போது, அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென அவர்களை வழி மறித்தனர்.

பின்னர் அவர்கள் கத்தியை காட்டி 2 பேரையும் மிரட்டினர். தொடர்ந்து செமினா ஜாஸ்மின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பறிபோன நகையின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது பற்றி செமினா ஜாஸ்மின் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பேராசிரியர் தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்துச் சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்