ராயப்பேட்டையில் கட்டிடத்தொழிலாளியை அடித்துக்கொன்ற வாலிபர் கைது பரபரப்பு வாக்குமூலம்

ராயப்பேட்டையில் கட்டிடத்தொழிலாளியை அடித்து கொன்று விட்டு தப்பி ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-07-30 22:15 GMT
அடையாறு,

சென்னை ராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இங்கு விழுப்புரத்தை சேர்ந்த சின்னப்பராஜ் (வயது 20), கடலூரை சேர்ந்த முல்லைநாதன் (22) உள்பட 10 கட்டிடத்தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது போதையில் சின்னப்பராஜிக்கும், முல்லைநாதனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த சக தொழிலாளர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். பின்னர் அனை வரும் தூங்கி விட்டனர்.

காலை எழுந்து பார்த்தபோது சின்னப்பராஜ் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் முல்லை நாதன் தலைமறைவாகி விட்டார். எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராயப்பேட்டை உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் முல்லைநாதனை தேடி வந்தனர்.

முதல்கட்டமாக சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் ராயப்பேட்டை பகுதியில் இருந்து சென்ற முல்லை நாதன் கோயம்பேடு வழியாக கடலூர் வரை சென்றதும், ஆனால் அங்கு இறங்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் பதுங்கி இருந்த முல்லைநாதனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் கூடுதல் நேரம் வேலை செய்தால் 200 ரூபாய் கூலி அதிகமாக கிடைக்கும். இவ்வாறு நாங்கள் கூடுதலாக வேலை செய்ததற்கு பணத்திற்கு பதில் மது பாட்டில்களை வழங்கினர். இதை என்னுடன் சேர்ந்து குடித்து விட்டு கூலிப்பணத்தை நான் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக சின்னப்பராஜ் அடிக்கடி என்னுடன் தகராறில் ஈடுபட்டார். சம்பவத்தன்றும் இதேபோல் தகராறு செய்து என்னை தாக்கினார். இதனால் எனக்கு ஆத்திரமும், அவமானமும் ஏற்பட்டது. எனவே அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது கம்பியால் அடித்துக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்