கட்சியில் பொறுப்பு வழங்கினால் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் சேர தயார் ஜெ.தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பேட்டி

கட்சியில் பொறுப்பு வழங்கினால் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தயார் என ஜெ.தீபா பேரவையில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி தெரிவித்தார்.

Update: 2019-07-30 22:45 GMT
திருச்சி,

திருச்சி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை செயலாளராக பதவி வகித்த ஆர்.சி.கோபியை சமீபத்தில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி ஜெ.தீபா அறிவித் தார். இந்த நிலையில் நேற்று திருச்சியில் அவர், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ஜெயலலிதாவின் மறு உருவமாகவே ஜெ.தீபாவை பார்த்ததாகவும், அவரை நம்பி கடந்த 3 ஆண்டுகளாக உழைப்பையும், பணத்தையும் விரயம் செய்து விட்டதாகவும், ஜெ.தீபா இனி தனது குடும்ப வாழ்க்கையை கவனிக்கப்போவதாக சமூக வலைதளமான முகநூலில் பதிவிட்டதையும் கலந்தாலோசனை நடத்தினர். பின்னர் ஆர்.சி.கோபி நிருபர்களிடம் கூறிய தாவது:-

ஜெ.தீபாவை நாங்கள் முதல்-அமைச்சராக்க ஆசைப்பட்டோம். ஆனால், அவர் கடந்த 6 மாதங்களாக அரசியலில் அவ்வளவு நாட்டம் காட்டவில்லை. இதனால், கட்சியில் தீவிரமாக செயல்பட்ட நான் உள்பட சிலருக்கு அவரது நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். இருவரும் கார சாரமாக பேசினோம். மறுநாள் என்னை அவர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார்.

அ.தி.மு.க.வில் சேர தயார்

திருச்சி மாநகர் மாவட்டத்தில் எனக்கு ஆதரவாளர் களாக 3 ஆயிரம் உள்ளனர். 600 பேர் வரை நிர்வாகிகளாக இருக்கிறார்கள். மேலும் 10 மாவட்ட செயலாளர்களிடம் பேசினேன். அவர்களும் தீபா மீது அதிருப்தியில் இருப்பது தெரிந்தது. இருப்பினும் இன்னும் 10 நாட்களில் ஒரு முடிவுக்கு வருவதாக கூறி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அம்மா பெயரில் புதிய அமைப்பு தொடங்குவதா? அல்லது தாய் கழகமான அ.தி.மு.க.வில் சேருவதா? என முடிவெடுக்க இருக்கிறோம். அதற்காக திருச்சியில் பிரமாண்ட கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்

அ.தி.மு.க.வில் சேருவது என்றால், முக்கிய பொறுப்பு வழங்கிட வேண்டும். அப்படி, பொறுப்பு வழங்கினால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஆதரவாளர்களுடன் இணைவதற்கு தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மகளிர் அணி செயலாளர் பாத்திமாமேரி, நூர்ஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்