விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திடீர் பரபரப்பு: சிவகங்கை கலெக்டர் முன்பு மோதல்: நாற்காலிகள் வீச்சு - ஒருவர் கைது

சிவகங்கை கலெக்டர் பங்கேற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 விவசாயிகள் மோதிக்கொண்டதுடன் நாற்காலிகள் வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-07-30 23:30 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில், சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் லதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீசுவரி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள், பயிர் காப்பீடு வழங்கியதில் விடுபட்ட 3 ஆயிரம் பேருக்கு காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த கூட்டத்தில் தெரிவித்தபடி பயிர் இழப்பீடு தொகையில் பிடித்தம் செய்த 10 சதவீத தொகையை இதுவரை திருப்பிதரவில்லை என்றும் கோரிக்கைகள் விடுத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பதில் அளித்தார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பயிர் இழப்பீட்டு தொகையை கடனுக்கான தொகையாக வரவு வைப்பதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது என்றும் விவசாயி பரத்ராஜா உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு கூட்டுறவு இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் பதில் அளித்த போது, “இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சங்கத்தின் செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பரத்ராஜா, “இதை உத்தரவாக தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார். இந்தநிலையில் திருப்பாச்சேத்தியை சேர்ந்த முத்துராஜா என்பவர், பரத்ராஜாவுக்கு ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு கைகலப்பு உருவாகியது.

இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டு அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இந்த மோதலால் அந்த இடம் திடீர் போர்க்களமாக காட்சியளித்தது.

இதையடுத்து அங்கிருந்த மற்ற விவசாயிகள் மற்றும் மேடையில் அமர்ந்திருந்த கலெக்டர் ஜெயகாந்தன், திட்ட இயக்குனர் வடிவேல் ஆகியோர் கீழே இறங்கி வந்து மோதலில் ஈடுபட்ட விவசாயிகளை சமாதானம் செய்தனர்.

உடனடியாக அங்கு சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.9 கோடியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேதியரேந்தல் பகுதியில் மண் அள்ள தடை விதிக்க வேண்டும், திருப்புவனம் புதூர் பகுதியில் வைகை ஆற்றில் நீர் மூழ்கி தடுப்பணை கட்டி கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் கூறும்போது, “வேதியரேந்தல் கிராமத்தில் ஆறு மற்றும் கால்வாய்க்கு இடையே உள்ள பகுதியில் மணல் அள்ளஅனுமதி கொடுத்ததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே அந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர், “அந்த பகுதியில் நடைபெறும் பிரச்சினை குறித்து தாசில்தார் கொடுத்த தகவலின் பேரில், அங்கு மணல் அள்ள அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்றார். இதை தொடர்ந்து மேலும் சில கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் குறைதீர்க்கும் கூட்டத்தில் நடந்த மோதல் சம்பவத்தின்போது விவசாயி முத்துராஜா, பரத்ராஜாவை தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்