விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் பாதிக்கப்பட்ட மீனவருக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு உத்தரவின்படி அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2019-07-30 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது வட்டான்வலசை கிராமம். இந்த ஊரை சேர்ந்த ரெத்தினம் என்பவரின் மகன் கண்ணன்(வயது 34). மீனவரான இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வட்டான்வலசை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் காலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கோவையில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் கண்ணன் முள்புதருக்குள் தூக்கி வீசப்பட்டார். முதுகு எலும்பு பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் கண்ணன் தனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் ரூ.3 லட்சத்து 43 ஆயிரம் இழப்பீட்டு தொகையை வட்டியுடன் சேர்த்து வழங்க உத்தரவிட்டது. அதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்து 78 தொகையை வழங்காததால் கண்ணன் தரப்பில் மீண்டும் நிறைவேற்றக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் கோர்ட்டு நீதிபதி ப்ரீத்தா, இழப்பீடு வழங்காததால் கோவை அரசு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி கோர்ட்டு பணியாளர்கள் நேற்று ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை-ராமேசுவரம் அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்