திருச்சியில் பரபரப்பு வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 37 பேர் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து கண்டோன்மெண்ட்டில் உள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.

Update: 2019-07-31 22:45 GMT
திருச்சி,

முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ஸ்டேட் வங்கி நடத்திய தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழக கொள்கை பரப்பு செயலாளர் சீனி விடுதலைஅரசு தலைமையில், மாநகர செயலாளர் வின்சென்ட், மக்கள் அதிகாரம் அமைப்பினர், தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்து கண்டோன்மெண்ட்டில் உள்ள ஸ்டேட் வங்கியை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.

இதுபற்றி முன்பே தகவல் அறிந்து அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் வங்கிக்குள் நுழைய முடியாதபடி அங்கு இரும்பு தடுப்புகளை அமைத்து இருந்தனர். இதையடுத்து ஊர்வலமாக வந்தவர்கள் வங்கியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 37 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்