சென்னையில் வாகன சோதனையின் போது போக்குவரத்து போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய வாலிபர்; தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

சென்னையில் வாகன சோதனையின் போது போக்குவரத்து போலீசாரை தாக்கிவிட்டு வாலிபர் தப்பி ஓடினார். பின்னர் அவர் போலீசுக்கு பயந்து கொசு மருந்தை குடித்து விட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-31 23:00 GMT
சென்னை,

சென்னை ஆவடியை அடுத்த கோவில்பதாகையை சேர்ந்தவர் கோமத் (வயது 29). ஆட்டோ டிரைவரான இவர் சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்தார். விடுமுறை நாளில் இவர் ஆட்டோ ஓட்டுவார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் இரவு போதையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

பாரிமுனையில் இருந்து கோவில்பதாகைக்கு செல்லும் போது கீழ்ப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் இவரை வழிமறித்தனர். போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி, கோமத்திடம் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டார்.

ஆவணங்களை தரமறுத்த கோமத், போக்குவரத்து போலீசாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கோமத் மது அருந்தி இருந்ததால் அவரை மருத்துவ பரிசோதனைக்கு போக்குவரத்து போலீசார் அழைத்தனர். ஆனால் அதற்கு மறுத்த கோமத் போக்குவரத்து போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் ஏறி கோமத் கோயம்பேட்டுக்கு தப்பிச் சென்றார். போலீசாரை தாக்கி விட்டு வந்ததால் எப்படியும் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று பயந்தார். இதனால் கோயம்பேட்டில் உள்ள கடையில் கொசு மருந்தை வாங்கி குடித்து விட்டு மயங்கி விழுந்தார். தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட கோமத் உயிர் பிழைத்துக் கொண்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 சட்ட பிரிவின் கீழ் கோமத் மீது வழக்குப்பதிவு செய்தார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வந்த உடன் கோமத் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்